உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அரச சொத்துக்கள் அனைத்தையும் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் உரிய அரச நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரம் மேற்கொள்ளப்படும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் வரை தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக கட்டமைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நிறைவு பெறுவது தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
காலி மாவட்டம் எல்பிட்டிய உள்ளூராட்சிமன்றத்தை தவிர ஏனைய உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெறும்.
இதனை தொடர்ந்து உள்ளூராட்சிமன்றங்களின் நிர்வாகம் மாநாகர ஆணையாளர்கள்,பிரதேச சபை செயலாளர்களிடம் பொறுப்பாக்கப்படும்.
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அரச சொத்துக்கள் அனைத்தையும் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் உரிய அரச நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சிமன்றங்களின் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் வரை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக கட்டமைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானங்கள் தன்னிச்சையாக உள்ளது.தீர்மானங்களை செயற்படுத்தும் போது துறைசார் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளது.
தீர்மானம் எடுப்பதற்கு முன் அரசாங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தையையும் ஆணைக்குழு முன்னெடுக்கவில்லை.
ஏப்ரல் 25 உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் என ஆணைக்குழு அறிவித்தது,ஆனால் வெற்றிப்பெறும் வேட்பாளர்களின் பதவி காலம் ஆரம்பிக்கும் திகதி தெளிவாக குறிப்பிடப்படவில்லை.அரசியலமைப்பின் ஏற்பாட்டுக்கும்,ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்றார்.

