அடுத்த பிரதமர் யார்? என்பதை மு.க.ஸ்டாலின் தீர்மானிப்பார்- அமைச்சர் பேச்சு

100 0

திருவேற்காட்டில், நகர தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு பேசியதாவது:- கொங்கு மண்டலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இவ்வளவு குறைவாக அ.தி.மு.க. வாக்கு வாங்கியது கிடையாது.

ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அ.தி.மு.க. சில வாக்குச்சாவடிகளில் இரண்டு இலக்கத்தில் வாக்கு பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இருண்டு கிடந்த தமிழ் நாட்டை வெற்றிப் பாதையில் அழைத்து செல்வது போல் இந்தியாவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல வழிக்காட்ட வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் எல்லாம் அழைப்புவிடுத்து வருகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டு தான் அண்மையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், கலைஞர் ஆட்சியைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமராக வரவேண்டும்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார். பிரதமராக கூடிய தகுதியும் உடையவர்.

இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடியவர். முதல்வர்களுக்கெல்லாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று அகில இந்திய தலைவர்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, திருவேற்காடு நகர செயலாளரும், நகரமன்ற தலைவருமான என்.இ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.