இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம்

218 0

இஸ்ரேலில் நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அந்நாட்டு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 வாரங்களாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிதுறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சம நிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கூறப்படுகிறது.

தலைநகர் டெல் அவிவ்வில் கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஏராளமான போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். போராட்டக்காரர் ஒருவர் கூறும்போது, “புதிய அரசு எடுக்க விரும்பும் இந்த நடவடிக்கைகள் இஸ்ரேலிய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை என்னால் நிரூப்பிக்க இயலும்“ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நீதித்துறை அதிகாரத்தை மாற்றியமைக்கும் மசோதாவை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரதமர் நெதன்யாகு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

— Ashok Swain (@ashoswai) March 11, 2023