கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடை பிடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. கடந்த சிலமாதங்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி தொற்றுபாதிப்பு தற்போது 40 ஆக அதிகரித்துள்ளது.
4 மாதங்களுக்கு பின்னர் தொற்றின் தீவிரத்தால் திருச்சியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா தொற்று பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்தியஅரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கரோனா பாதிப்பு 2020-ம் ஆண்டு தொடங்கி 36,000 என்ற அளவில் உச்சத்தை தொட்டது. சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டதால் அந்த எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு அளவுக்கு குறைந்து வந்தது. தற்போது மீண்டும் தொற்றின் பாதிப்புஅதிகரித்துள்ளது.

