நல்லிணக்க செயற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்!

260 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது அமர்வு ஆரம்பமாகி தற்போது தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த அமர்வின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார்.அந்த உரையில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஐனநாயகம், நல்லிணக்கம்.சகவாழ்வு, மனித உரிமைகள் என்பன தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் விலாவாரியாக எடுத்துக் கூறினார்.

இந்தக் குறுகிய காலப் பகுதியில் இவ்வரசாங்கம் இவ்வளவு தொகை வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதா? என்று எவரையுமே கேட்கத் தூண்டும். அதேநேரம் இவை தொடர்பில் இலங்கையை விமர்சிப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

அதாவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாத அமர்வின் போது, இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகும்.

இருப்பினும் இதனை குறுகிய நோக்கம் கொண்டோரும் அற்ப அரசியல் இலாபம் தேடும் நோக்கில் செயற்படுவோரும் இந்த அனுசரணையைக் காட்டிக் கொடுப்பாகவும், துரோகம் மிக்க செயலாகவும் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.ஆனால் அந்நடவடிக்கை நாட்டின் விமோசனத்தையும், சுபிட்சத்தையும் அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சென்றதைத் தொடர்ந்து இலங்கை எவ்வாறான நிலைக்கு முகம் கொடுத்து வந்தது என்பதை எல்லோருமே அறிவர்.அவ்வாறான சூழலில் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த நகர்வுகளின் பயனாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நகர்வுகளில் மென்மைப் போக்கு ஏற்பட்டது.

அதற்கு இந்த இணை அனுசரணையும் பெரிதும் உதவின என்பதில் ஐயமில்லை.இருந்தும் இவை குறித்து சிறிதளவேனும் கவனம் செலுத்தாதவர்கள் இவ்வரசாங்கத்தின் மனித உரிமைகள், சக வாழ்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளையும் நகர்வுகளையும் எதிர்க்கவும் விமர்சிக்கவும் செய்கின்றனர்.

ஆனாலும் அரசாங்கம் தமது பயணத்தில் தொடர்ந்தும் பயணித்து நாட்டில் நிலைபேறான அமைதி சாமாதானத்தை ஏற்படுத்துவதிலும் சகவாழ்வு நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் திடசங்கற்பத்துடன் செயற்பட்டு வருகின்றது.அந்த வகையில், ‘எவரும் பலவந்தமாக காணாமல் போவதிலிருந்து பாதுகாப்புப் பெறுவது’ தொடர்பான சர்வதேச சமவாயத்தை சட்டமாக்கவென அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் விடுத்து அதனைப் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படவிருக்கின்றது.அதேநேரம் சர்வதேச நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவாறு, பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் குறித்த கொள்கைத் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெறுகின்றன.

அத்தோடு உண்மை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைபு எதிர்வரும் இரு மாதங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.காணாமல் போனோருக்கான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது. அதற்கு சபாநாயகரும் அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதற்கு ஒரு பில்லியன் ரூபாவுக்கும் மேல் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறப்புகள் தொடர்பான (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாகக் காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவை இவ்வாறிருக்க, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக 2016ல் 11,258 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதோடு, 2-017ல் 5732 வீடுகளை அமைக்கவென 4765 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு 2016ல் 5515.98 ஏக்கர்கள் அரச காணிகளும், 2090.03 ஏக்கர்கள் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டதோடு, 2017 ஜனவரியில் மாத்திரம் 1383.51 ஏக்கர்கள் அரச காணிகளும், 30.54 தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.இதேவேளை இந்நாட்டு அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இவ்வருடம் நல்லிணக்க தேசிய வாரம் ஜனவரி மாதம் அனுஷ்டிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இவ்வாரத்தில் சகவாழ்வு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், மதிப்பளித்தல், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்ட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறு இவ்வரசாங்கம் மனித உரிமைகள், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் குறுகிய காலத்தில் பலவித வேலைத் திட்டங்களை முன்னெடுத்ததன் பயனாக உள்நாட்டு மக்கள் மத்தியில் மாத்திரமல்லாமல் சர்வதேச சமூகத்திலும் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அதுவே அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்புமாகும். அதன் பயனாக இலங்கையின் ஐரோப்பாவுக்கான மீன் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டுள்ளதோடு ஜி. எஸ் பி. பிளஸ் நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இன்னும் பலவித நன்மைகளை இந்நாடு பெற்றுக் கொண்டுள்ளது.’இருந்தும் குறுகிய நோக்கம் கொண்டோரின் எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் தான் மனித உரிமைகள், நல்லிணக்கம், சகவாழ்வு தொடர்பில் முன்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.

இரு பக்கத்திலும் கடும் போக்குவாத மற்றும் பிற்போக்குவாத சக்திகள் குறுகிய அரசியல் இலாபம் தேடும் நோக்கில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் மனித உரிமைகள், நல்லிணக்கம் தொடர்பில் இலக்கை அடைவதில் இலங்கை உறுதியாக உள்ளது.குறிப்பாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது’ என்று அமைச்சர் மங்கள சமரவீர தமதுரையின் போது ஜெனீவாவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அமைதி, சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வின் அவசியத்தை விரும்பும் எவரும் இவ்வரசாங்கத்தின் இந்த உறுதிப்பாட்டை வரவேற்கவே செய்வர்.ஆகவே மனித உரிமைகள், நல்லிணக்கம் சகவாழ்வு தொடர்பில் இவ்வரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களிலும் மேற்கொண்டிருக்கும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருப்பதோடு அவ்வாறான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதும் அதற்கு வலுவூட்டுவதும் ஒவ்வொருவரதும் பொறுப்பும் கடமையும் ஆகும். அதுவே நாட்டின் விமோசனத்திற்கு பக்கத் துணையாக அமையும்.