நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (10) ஒன்றரை வயது மகள் மற்றும் 17 யுவதி சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, பகமூனயில் உள்ள வீடொன்றில் பணத்திற்காக தந்தையொருவர் ஒன்றரை வயது மகளை கொடூரமாகத் தாக்கியமை மற்றும் ராகமையிலுள்ள வீடொன்றில் 17 வயது யுவதி தாக்குதலுக்கு இலக்காகி இருந்த காணொளிகளை அடிப்படையாக கொண்டு குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் தனது 17 வயதுடைய வளர்ப்பு மகளை சித்திரவதை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம, குருகுலேவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்து 39 வயதுடைய பெண் குறித்த யுவதியை தாக்கியுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியின் தாய் உயிரிழந்ததையடுத்து யுவதியின் தந்தை மறுமணம் செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பெண் 9 வயதுடைய மகளின் தாய் என்றும் தந்தை வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொரியாவில் பணிபுரிந்து வரும் யுவதியின் தந்தை வீட்டில் உள்ள சி.சி.டிவி காட்சிகள் அடங்கிய காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான யுவதி
பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மருத்துவ பரிசோதனைக்காக ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பகமூன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பணத்திற்காக தனது ஒன்றரை வயது மகளை சித்திரவதை செய்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த குழந்தை தந்தையிடம் பணம் இல்லாமல் போகும் ஒவ்வொரு முறையும் கடுமையாகத் தாக்கப்பட்டதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குழந்தையை சித்திரவதை செய்யும் தந்தை அதனை காணொளியாக பதிவு செய்து தாய்க்கு அனுப்பி பணம் அனுப்புமாறு வற்புறுத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் தாய் குழந்தைக்கு மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை தனது தாயாரிடம் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொலிஸார் நேற்று (10) குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் இந்த திருமணத்திற்கு முன்னர் வேறு திருமணம் செய்து கொண்டதாகவும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான குழந்தையை உறவினரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சந்தேகநபர் ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

