கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்கு….(காணொளி)

246 0

 

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் இன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் கையளித்ததை அடுத்து, தமது காணிகளை மக்கள் இன்று பார்வையிட்டனர்.

42 ஏக்கர் காணிகள் உரியவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் குணபாலன் தெரிவித்துள்ளார்.

காணி உரிமைப்பத்திரம் வைத்திருக்கின்ற 54 குடும்பங்களின் காணிகள் உரியவர்களிம் மீளவும் ஒப்படைப்பதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, 3 தினங்களுக்குள் பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதியால் உத்தரவாதம் வழங்கப்பட்ட நிலையில், நேற்றையதினம் மக்களின் காணிகள் அளவீடு செய்யப்பட்டு இன்று காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாத காலமாக முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று தமது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.