ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்ற வலியுறுத்தி மின்வாரியம் நோட்டீஸ்

166 0

ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகளை வைத்திருந்தால் அவற்றை ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும் என மின்வாரியம் நோட்டீஸ் வழங்கி வருவதால், 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகுமோ என்று நுகர்வோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்துக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப்.10-ம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து, மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதற்கிடையே, மானியம் வழங்கும் திட்டங்கள் மூலம் பயனடையும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாககக் கூறி, மின்வாரியம் மின்இணைப்புடன், மின்நுகர்வோரின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. கடந்த மாதம் 28-ம் தேதியுடன் இப்பணி நிறைவடைந்தது.

மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியான உடன், 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியானது. இதனால், தொடக்கத்தில் மின்நுகர்வோர் தங்களது மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தயக்கம் காட்டினர்.

பின்னர், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படமாட்டாது என கூறினார். இதையடுத்து, மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில், ஒரே வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால், ஆதார் எண் இணைக்கப்பட்ட மின்இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்ற தகவல் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

அத்துடன், மின்வாரிய அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் மின்நுகர்வோரின் வீடுகளுக்குச் சென்று நோட்டீஸ் வழங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகுமோ என மின்நுகர்வோர் மத்தியில் மீண்டும் குழப்பமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் விளக்கம்: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்துக்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின்இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின்இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது ஆகும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப்.9-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட வீதப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் நபரின் பெயரில், ஒரு அடிப்படையில் ஒரே வீட்டில்,குடியிருப்பில், ஒரே நபரின் குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின்னிணைப்புகளை கூடுதல் பொதுப்பயன்பாட்டுக்கான மின்னிணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு/வீதப்பட்டியல் (Tariff conversion) தொடங்க கூடுதல் காலம் கோரப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின்பகிர்மான வட்டங்களிலுள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.