சர்வதேச மகளிர் தினம்

746 0

1975 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் சர்வதேச மகளிர் தினத்தை ஐ.நா. அமைப்பு கொண்டாட தொடங்கியது. இதையடுத்து மார்ச் 8ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாக ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. இந்த நாளில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உலகெங்கிலும் பெண்கள் அமைதியாக வாழுவதற்கு நடவடிக்கை எடுப்பது என்றும் உறுதியேற்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று புதிய கருப்பொருளை ஐ.நா. அவை அறிமுகம் செய்து வருகிறது. 2023ஆம் ஆண்டின் கருப்பொருள் :

அனைவருக்கும் டிஜிட்டல் :

“பாலின சமத்துவத்திற்கான புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்பம்” என்ற பெயரில் இந்த ஆண்டின் கருப்பொருள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று இந்நாளில் உணர்த்தப்படுகிறது.

பாலின சமத்துவத்தை நாம் காப்பாற்றுவதுடன், பெண்களின் சாதனைகள் மற்றும் வெற்றிகள் குறித்து இந்த நாளில் கொண்டாடுகின்றனர். சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஆணும், பெண்ணும் சமம் என்ற சிந்தனைகளை ஊக்குவிக்கின்றனர்.

2023 இல் தான் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட வேண்டும் ஐ.நா தனது கருப்பொருளாக கூறுகின்றது. ஆனால் 31 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்துலக பெண்கள் தினமான பங்குனி 8, 1992 இல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில், ‘பெண் விடுதலை எனும் பொழுது அரச ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளாதார சுரண்டல் முறையிலிருந்தும் பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறிக்கிறோம். எனவே எமது இயக்கம் வடிவமைத்துள்ள பெண் விடுதலைப் போராட்டமானது தேச விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்ற என்ற குறிக்கோள்களை கொண்ட மும்முனை விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான போராட்டம் அல்ல.இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான போராட்டம்.என குறிப்பிட்டுள்ளார்.

1985.08.18 அன்று இந்தியாவின் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலைக் காட்டில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பாசறை ஆரம்பமானது. எனினும், பெண்களை அரசியல்மயப்படுத்தலும், போராட்டத்தில் பெண்கள் உள்வாங்கப்படலும் இதற்கு முந்தைய ஆண்டுகளிலேயே ஆரம்பித்துவிட்டன,

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தேசியத்தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது மாலதியின் எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. விடுதலைப்புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது. ஆகவே அக்டோபர் 10 தமிழீழ பெண்கள் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

“ பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…” என தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அழமான கருத்தாகும்.