சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை விசேட அரசியலமைப்பு பேரவைக் கூட்டம்

122 0

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 09 ஆம் திகதி வியாழக்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியலமைப்பு பேரவை முன்னெடுத்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனத்துக்கான விண்ணப்பம் கடந்த பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை கோரப்பட்டது. சிவில் பிரஜைகளிடமிருந்து 100 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை நாளை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு ஆளும் தரப்பினர் வலியுறுத்துகின்ற நிலையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தி தேர்தல் நடவடிக்கைகளை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதி;கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,ஏனெனில் தேர்தல் நடவடிக்கைகள் சட்டத்திற்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.