இலங்கை இந்திய மீனவர்கள் இடையே கச்சதீவில் பேச்சுவார்த்தை

117 0

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று (03) மாலை மூன்று மணியளவில் கச்சதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவபிரதிநிகள் மற்றும் கட்சி சார் பிரதிநிகள் அமைச்சர் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்திய மீனவ பிரதிநிதிகள் தரப்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை மடியினை விடுத்து பிறதொழில்களுக்கு தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும் தமது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மீனவர்களை மனித உரிமைசார் அடிப்படையில் கூலிக்காக வருபவர்களை கைது செய்யாது விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கருத்து தெரிவித்த இலங்கை மீனவர்கள் 20 வருடங்களாக உங்களுடன் பேசி வருகின்றோம். எந்தவித பிரியோசனமும் இல்லை எங்கள் நிலைமைகளை புரிந்து கொள்ளுங்கள். இலங்கை மீனவர்களாக இந்திய மீனவர்களை எக்காரணம் கொண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய விடமாட்டோம் என தெரிவித்தனர்.

இதே நிலையில் ஒரு மீனவர் எமக்குரிய தீர்வு ஒரு கிழமைக்குள் வழங்கப்படாவிடில் அமைச்சரதும் துணைத்தூதுவரதும் காரியாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

இதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக தெரிவித்து கலந்துரையாடலை நிறைவுறுத்தினார்.

இதன்பொழுது மன்னார், கிளிநொச்சி, யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர்கள், வடமாகாண கடற்படை தளபதி அனுர தென்னகோன், பா.ஜ.க தமிழக மீனவ தலைவர் எம்.சி முனுசாமி உட்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.