தமிழக படகுகளின் பராமரிப்பு செலவுக்கு 4 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய் அறவீடு

151 0

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலார்களின் படகுகளை மீள கையளிக்கும் போது, அவற்றின் பராமரிப்பு செலவுக்கான பணமாக 4 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் பிரசன்னமாகி இருந்த நான்கு உரிமையாளர்களின் படகுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க மன்று உத்தரவிட்டது.

அதன்போது , இலங்கை கடற்பரப்பில் இதுவரை காலமும் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டமைக்கான இரண்டு படகுகளுக்கு தலா ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபாயும் , மற்றுமொரு படகுக்கு ஒரு இலட்சத்து 29 ஆயிரம் ரூபாயும் , மற்றைய படகுக்கு 54 ஆயிரத்து 500 ரூபாயும் பராமரிப்பு செலவாக செலுத்த வேண்டும் என மன்று கட்டளையிட்டுள்ளது.

அதேவேளை மன்றின் கட்டளை தொடர்பில் வழக்கு தொடுநர் தரப்பினருக்கோ, எதிராளிகளுக்கோ ஆட்சேபணை இருப்பின் கட்டளைக்கு எதிராக மேன் முறையீட்டை செய்து கொள்ள முடியும் என மன்று பரிந்துரைத்தது. அத்துடன்  மேன்முறையீட்டு காலம் வரையில் படகுகள் விடுவிக்கப்படாது, தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டது.