2015 ஆம் ஆண்டுக்குரிய முழு பிணைமுறிகளுக்குமான மத்தியவங்கியின் வர்த்தமானியில் ஜனவரி மாதம் முதலாம் திகதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டிருந்தமையே சிக்கலுக்கு காரணமாகுமென அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் மத்தியவங்கியின் வர்த்தமானி விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பொதுவாக மத்தியவங்கி பிணை முறி விநியோகத்தின்போது அதனை ஒவ்வொன்றாக வர்த்தமானியில் வெளியிடவேண்டும். அதில் நிதி அமைச்சர் கைச்சாத்திடவேண்டும்.
ஆனால் 2013 ஆம் ஆண்டிலிருந்து ஒருவருடத்திற்குரிய அனைத்து பிணைமுறி தேவைகளுக்குமான வர்த்தமானி ஒரே தடவையில் வெளியிடப்பட்டுள்ளதுடன் அதில் நிதி அமைச்சர் கைச்சாத்திடவில்லை. இது ஏன் என்று தெரியாது? ஏன் இந்த மரபில் மாற்றம் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
அந்த வகையில் 2015 ஆம் ஆண்டுக்கான அனைத்து பிணை முறிகளுக்குமான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி முதலாம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
அப்போது நிதி அமைச்சராக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று வருட வழமைக்கு மாறாக அதில் கைச்சாத்திட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டுக்குரிய பிணை முறிகளுக்கான வர்த்தமானி அறிவித்தலில் அப்போதைய ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் வர்த்தமானியில் கைச்சாத்திடவில்லை. இதுதான் குழப்பத்திற்கு காரணமாகும்.
2015 ஆம் ஆண்டுக்குரிய முழு பிணைமுறிகளுக்குமான வர்த்தமானியில் ஜனவரி மாதம் முதலாம் திகதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டிருந்தமையே இந்த சிக்கலுக்கு காரணமாகும். இதில் மத்திய வங்கியின் அதிகாரிகள் தவறிழைத்துள்ளமை தெளிவாகிறது. சரியான வகையில் ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஜனவரி 9 ஆம் திகதி புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை என அவர் தெரிவித்தார்.

