முதலமைச்சர் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

160 0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அகில இந்திய அளவிலான கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டம் சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முதலமைச்சரை வாழ்த்தி பேச உள்ளனர். இதனையடுத்து பொதுக்கூட்டத்திற்கான பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் மற்றும் இதர ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்ட மேடையானது முற்றிலும் டிஜிட்டல் மயமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர். முன்னதாக நாளை காலை 7 மணிக்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். பின்னர் காலை 8.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் சென்று தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.