கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த பல கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உதவியமை தொடர்பில் பிக்குகள் இருவர் உட்பட கார் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெட்டிபொல பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 38 மற்றும் 40 வயதுடைய ஹெட்டிப்பொல, ரிட்டாதெனிய விகாரையின் பிக்குகள் இருவர் என்றும், 27 வயதுடைய அம்பேவெல, களுபோவிடியனையைச் சேர்ந்த காரின் சாரதியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் காரில் இருந்து துபாய்க்கு தப்பிச் செல்ல வந்த சந்தேகநபரின் இரண்டு பயணப்பொதிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 18ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத்தில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் பொய்யான பெயரில் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவிசாவளை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட பயணத்தடை உத்தரவு ஜனவரி 03 ஆம் திகதி அன்று குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு வழங்கப்பட்டது.
அதன் பிரகாரம் கடந்த 24ஆம் திகதி டுபாய்க்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தசந்தேக நபர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டிருந்த போதிலும் சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

