முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்றைய தினம் விடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் 42 ஏக்கர் காணி இன்றைய தினம் விடுவிக்கப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 29 நாட்களாக கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள் தங்களின் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.
அது தொடர்பில் கடந்த 14ஆம் திகதி அமைச்சர் டீ.எம் சுவாமிநாதனினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று முன்தினம் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியதாகவும், அதனை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த 42 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை இரண்டு வாரத்திற்குள் விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த கணிக்குள் நான்காம் திகதி காணி உரிமையாளர்களை அழைத்து செல்லவிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனினும் விடுவிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் ஏழரை ஏக்கர் காணிக்குள் தாங்கள் கால்பதித்த பின்னரே போராட்டத்தைக் கைவிடுவோம் எனவும் அதுவரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நிறுத்தி தமது சாத்வீக போராட்டத்தை தொடரப்போவதாகவும் புதுக்குடியிருப்பு மக்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியும் விடுவிக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த காணியை விடுவிக்கப்போவதாக படைத்தரப்பினரால் தங்களுக்கு அறிவித்தல் கிடைக்கபெற்றுள்ளதாகவும், குறித்த காணியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

