தமிழக கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கினால் இழுவைமடிப் படகுகளே இங்கு வரும்

136 0

தமிழக கடற்தொழிலாளர்களுக்கு மீன்பிடிக்க அனுமதித்தால் அவர்கள் இழுவைமடிப் படகுகளில் வந்தே வடக்கு கடற்பரப்பில் மீன்பிடிப்பார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்தொழிலாளர்கள் அனுமதிபெற்று மீன்பிடிப்பதற்கு, அனுமதி வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டைக் கேட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சிலர் இழுவைமடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். இங்கு செய்தாலும் சரி, எங்கு செய்தாலும் சரி அது இல்லாதொழிக்கப்படவேண்டும்.

இழுவைமடித் தொழிலை தடைசெய்யும் சட்டத்தை தனிநபர் சட்டவரைவாக நான் சமர்ப்பித்திருந்தேன். அது நல்லாட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனைப் பிரயோகிக்கவில்லை.

அதற்காக இழுவைமடித் தொழிலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. தமிழக மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்கள் சிறிய நீர் நிலையால் பிரிக்கப்பட்டிருக்கின்றனர்.

 

இரு தரப்பினரும் நாட்டுப் படகில் மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டுவது சகஜமான விடயம். எனவே, இந்தப் பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில்தான் அணுகவேண்டும்.

அனுமதி பெற்று மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படுமாக இருந்தால் இந்திய கடற்தொழிலாளர்கள் இழுவைமடியிலேயே வந்து மீன்பிடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.