சம்மாந்துறையில் கல்குவாரி குட்டையினுள் மூழ்கி சிறுவன் பலி!

279 0

சம்மாந்துறை சென்னல் கிராமம் 1 சேவையாளர் பிரிவில் உள்ள கல்குவாரி குட்டை பகுதியில் குளிக்க சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (26) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மூன்று சிறுவர்கள் சம்பவ இடமான கல்குவாரி பகுதியில் நீர் காணப்பட்டதால் குளிப்பதற்காக தயாராகியுள்ளனர்.

மரணமான சிறுவன் மற்ற இரு நண்பர்களையும் குளிப்பதற்காக அழைத்துள்ளார். அவர்கள் முடியாது என்று கூற அச் சிறுவன் முதலில் ஓர் உயரமான மலையில் ஏறி குறித்த பகுதியில் பாய்ந்துள்ளார்.

குட்டையின் ஆழத்தினை அறியாமல் பாய்ந்த அச் சிறுவன் காணவில்லை என  அங்கிருந்த இரு சிறுவர்களும் சத்தம் போட்டு கூச்சளிட்டுள்ளார்கள்.

 

இந்நிலையிலேயே சிறுவன் கல்குவாரி குட்டையினுள் மூழ்கி உயிரிழந்தாக  பொலிஸாின்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த  சிறுவனின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இன்று (27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த கல்குவாரி குட்டை சுமார் 20 வருடங்களாக உபயோகிக்கப்படாமல்  காணப்படுவதாகவும் சுமார் கிட்டத்தட்ட 30 அடி ஆழமாக உள்ளதாகவும்  அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.