தேசத்துரோகிகள் விவகாரம்:190 பேர் குறித்தும் ஜனாதிபதி கரிசனை!

255 0

பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாகப் பிரகடனம் செய்யப்பட்ட 190 பேர் தொடர்பிலும், தான் கவனம் செலுத்தி உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

1804 ஜூன் 07ஆம் திகதி, பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாகப் பிரகடனம் செய்யப்பட்ட 190 பேருக்கு எதிரான வரத்தமானி அறிவித்தலை நீக்கி, அவர்களை, நாட்டுக்காகப் போராடிய தேசிய வீரர்கள் எனப் பிரகடனம் செய்யுமாறு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விடயம் சம்பந்தமாக, தான் கவனம் செலுத்தி உள்ளதாக, இராஜாங்க அமைச்சருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த மூவினத்தைச் சேர்ந்த 190 பேர் தேசத்துரோகிகளாக, 1804 ஜூன் 07ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த பிரகடனத்தை இரத்துச் செய்து அவர்களை நாட்டுக்காக, போராடிய தேசிய வீரர்கள் என பிரகடனம் செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரிடம் கோரிக்கை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்திருந்தார்.

பிரித்தானிய ஆட்சியாளர்களால் தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து 19 பேரின் பெயர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 8ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக இரத்துச்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.