மதுரை மாநகராட்சியில் மாமன்ற மண்டல கவுன்சில் கூட்டம் நடத்த மண்டல தலைவர்கள் கோரிக்கை

97 0

மதுரை மாநகராட்சியில் மாமன்ற மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்று மாநகராட்சி மண்டல தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் மதுரை மாநகராட்சியில் மண்டல வாரியாக மாமன்ற கவுன்சில் கூட்டம் மாதத்திற்கு ஒரு முறை நடப்பது வழக்கம். மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள அண்ணா மாளிகையில் இந்த கூட்டம் நடக்கும். இதில், மேயர், ஆணையாளர், மாநகர பொறியாளர், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்பார்கள். இந்த கூட்டங்களில், மண்டலத்தலைவர்களும் கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் முன்வைப்பார்கள். அதற்கு மேயர், ஆணையாளர், பிற மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளிப்பார்கள். இந்த கூட்டத்தில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் மண்டல தலைவர்களும் கவுன்சிலர்களும் அடுத்து வரக்கூடிய மாமன்ற கவுன்சில் கூட்டத்தில் பேசுவார்கள். ஆனால், தற்போது இந்த மாமன்ற மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்று மண்டல தலைவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் தரப்பில் விசாரித்தபோது, ‘‘மாநகராட்சி அலுவலகத்தில் மண்டல கவுன்சில் கூட்டம் இதுவரை ஒரு முறை கூட நடத்தப்படவில்லை. அதற்கான தேவையும் தற்போது இல்லை. மண்டலத்தலைவரோ, கவுன்சிலரோ தங்கள் வார்டு பிரச்சினைகளை மேயரிடம் நேரிடையாக முறையிடலாம். மேயர் தினமும் அலுவலகத்திற்கு வருகிறார். மண்டல தலைவர்களையும், கவுன்சிலர்களையும் சந்தித்துப் பேச அவர் தயாராக இருக்கிறார். ஆனால், மண்டல தலைவர்களில் சிலர், மேயரை பார்த்து பிரச்சினைகளை சொல்வதே இல்லை. நேரடியாக ஆணையாளரை பார்த்து மனு கொடுக்கச் செல்கிறார்கள். ஆணையாளர், திட்டங்களை செயல்படுத்த மட்டுமே முடியும். மேயரிடம் தெரிவிக்காமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் எப்படி?’’ என தெரிவிக்கப்பட்டது.