டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ

79 0

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது சிபிஐ. நேற்று காலையில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான நிலையில் சிபிஐ அவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.

இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் உட்பட பலரும் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்கு அவர் நேற்று (ஞாயிறு) காலை 11 மணி அளவில் ஆஜராகி இருந்தார். சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் மணிஷ் சிசோடியா குடும்பத்தை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சந்தித்துள்ளார். அப்போது அவருடன் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் சென்றிருந்தார்.