புத்தக வெளியீட்டு நிறுவனமொன்றின் முகவராக நடித்து லட்சக்கணக்கில் மோசடி

104 0

பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமொன்றின் முகவராக நடித்து இலட்சக்கணக்கில் மோசடி செய்த பேர்வழியொருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மோசடிப் பேர்வழி, முக்கிய புத்தக வெளியீட்டு நிறுவனமொன்றின் முகவர் போன்று நடித்து நாட்டின் பல பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பலரை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்துள்ளார்.

அண்மையில் அவர் பதுளை பிரதேசத்திலும் பலரிடம் தனது கைவரிசையைக் காட்டி உள்ளார். இந்நிலையில் குறித்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பல வர்த்தகர்களுக்கு கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் உள்ள பிரபல புத்தக நிறுவனத்தினால் அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விநியோகம் செய்வதற்காக பெற்றுத் தருவதாகவும், அதற்காக ஊக்கத்தொகை மற்றும் பெருந்தொகையான விலைக்கழிவு கொடுப்பதாக கூறி வர்த்தகர்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் பலரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

வியாபார இடத்தில் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்புப் பலகை தயாரிப்பதற்காக 5000 ரூபாவும், நகல் மற்றும் ரீலோடிங் இயந்திரம் வழங்குவதற்காக மேலும் 5000 ரூபாவும் அந்த மோசடிப் பேர்வழி, வியாபாரிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் பல்வேறு பிரதேசங்களில் நடமாடுவதுடன், பிரதேசத்துக்குப் பிரதேசம் கையடக்கத்​தொலைபேசி இலக்கங்களை மாற்றி பல்வேறு மட்ட வியாபாரிகளை ஏமாற்றி பணத்தை மோசடி செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் உள்ள பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒன்றும் குறித்த நபருக்கு எதிராக பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.