பௌத்த கட்டுமானம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

88 0

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக நீதிமன்ற கட்டளையை மீறி கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு பௌத்த விகாரை முற்றுப்பெற்றுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை மீறினார்கள் என குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று (23) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

 

அந்த முறைபாட்டில் குருந்தூர் மலையில் தொடர்சியாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை புறந்தள்ளி அதனை மீறி பௌத்த கட்டுமானங்களை மேற்கொண்டார்கள் என வவுனியா பிராந்திய தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஜயதிலக மற்றும் குருந்தூர் மலை விகாரையின் பௌத்த பிக்கு கல்கமுவ சாந்தபோதி தேரர் ஆகியோருக்கு எதிராகவும் மற்றும் 24 மணி நேர பொலிஸ் காவல் குருந்தூர் மலையில் உள்ளபோதிலும்  நீதிமன்றின் உத்தரவை மீறியோரை கட்டுப்படுத்த தவறியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறியவராகவும் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்கவுக்கு எதிராகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இந்த வழக்கின் மீதான கட்டளைக்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி  ஒரு கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

அதாவது கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்கள்களை குருந்தூர்மலையில் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

இந்த கட்டளை வழங்கப்படும்போது பூரணமடையாத நிலையில் காணப்பட்ட குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் தொடர்சியாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளதை இன்றையதினம் (23) குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவநேசன் ஆகியோர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே இந்த முறைப்பாடு பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்டுள்ளது.

கடந்த வருடங்களில் இவ்வாறு பல தடவைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்டுள்ள போதிலும் பொலிஸார் எந்தவிதமான விசாரணைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை  என்பதும் குறிப்பிடத்தக்கது.