நிதியமைச்சர் பொதுமக்களைத் தவறாக வழிநடாத்துகின்றார்! உதய கம்மன்பில

303 0

குற்றச்சாட்டுநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பான சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்திருந்த அவர்,

மத்திய வங்கி பிணைமுறிகள் விற்பனை தொடர்பான சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கான இலக்கம் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 01ம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் வர்த்தமானி அறிவித்தல் அதன் பின்னரான ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 நவம்பர் மாதம் 16ம் திகதியே வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே.

அத்துடன் சட்டபூர்வமான ஆவணங்கள் அமைச்சு செயலாளர்களினால் பூர்த்தி செய்யப்பட்டு , அதன் பின்னரே அமைச்சரின் கையொப்பத்துக்காக சமர்ப்பிக்கப்படும்.

அந்த வகையில் நிதியமைச்சரின் செயலாளரும் இதன் பொறுப்பில் இருந்துவிடுபட முடியாது.

அமைச்சர் ரவி கருணாநாயக்க மோசடியான ஆவணமொன்றை தயாரித்து, அதனை நியாயப்படுத்தவும், பொதுமக்களை தவறாக வழிநடத்தவும் முயற்சிக்கின்றார்.

ஆனால் மோசடியான ஆவணங்கள் தயாரித்தல் பெரும் குற்றச் செயல்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.தற்போதைய நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தச் சம்பவம் தொடர்பில் நேரடியாக வழக்குத் தொடுப்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்குப் பதிலாக பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவில் இது தொடர்பாக முறைப்பாடொன்றை மேற்கொள்வதே உசிதமானது.

அதன் மூலம் நடத்தப்படும் விசாரணையில் மத்திய வங்கியின் ஊழியர்கள் உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.