இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இலங்கை இணக்கமாக செயற்படுகிறது

88 0

எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ளாமல் அனைத்து நாடுகளுடன் பொதுவான கொள்கையுடன் இணக்கமாக செயற்படும் வெளிவிவகார கொள்கை அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகிறது.

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இலங்கை இணக்கமாக செயற்படுகிறது எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர முதலீட்டுச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

காலத்திற்கு காலம் எவ்வாறு ஒவ்வொரு கட்சிகளும் துறைமுக நகரம் தொடர்பில் நிலைப்பாடுகளை மாற்றியுள்ளன. உலக நாடுகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருளாதார நகரங்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் உள்ளன.

இந்நிலையில் நாங்கள் இங்கிருக்கும் வளத்தை பயன்படுத்தி எவ்வாறு வருமானத்தை அதிகரித்து வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது என்று சிந்தித்து செயற்பட வேண்டும்.

வருமானத்தை அதிகரித்தாலே நாட்டை முன்னேற்ற முடியும்.அரச சேவைக்கே அதிகளவில் நிதியை செலவழிக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில் 107 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலும் பாகிஸ்தானில் 101 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலும் பங்களாதேஷில் 140 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலும் அரச ஊழியர் இருக்கும் நிலையில் இலங்கையில் 16 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் அரச ஊழியர் இருக்கின்றார்.

இந்நிலையில் அரச வருமானத்தில் 80 வீதத்தை அரச சேவையை நடத்திச் செல்லவும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவுமே பயன்படுத்தப்படுகின்றது.

இதனை எப்படி நாங்கள் முகம்கொடுத்து நிர்வாகம் செய்யப் போகின்றோம் என்றே பார்க்க வேண்டும். வரிகளை அதிகரித்தாலும் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் கடனுக்கான வட்டிகளை அதிகளவில் செலுத்த வேண்டியுள்ளது.

லெபனான், இரான்,துருக்கி உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் அதிகரித்திருந்தன. லெபனான் போன்ற நாடுகளில் மின்வெட்டு நேரத்தைக்கூட கூற முடியாதளவுக்கு நிலைமை உள்ளது. ஆனால் இங்கே முன்னேற்றம் கண்டு பணவீக்கத்தை 90இல் இருந்து இப்போது குறைத்து வருகின்றோம்.

அதேவேளை  துறைமுக நகரத்திட்டத்தால் நமக்கு நன்மைகள் கிடைக்கவுள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடுகள் கிடைக்கவுள்ளன. இதன்மூலம் 87000 தொழில்வாய்ப்புகள் கிடைக்கும்.

இதேவேளை எல்லா நாடுகளுடனும் நாங்கள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். அமெரிக்காவே எங்களின் முதலாவது ஏற்றுமதி நாடு அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளும், இங்கிலாந்தும் உள்ளன.

இதனால் அவற்றை கோபித்துக்கொண்டு இருக்க முடியாது. அத்துடன் சீனா எங்களின் வரலாற்று நண்பன்.எங்களின் பாதுகாப்புக்காக முன்னின்றுள்ளது. யுத்த காலத்தில் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளன.

இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நாடாக உள்ளது. இதில் இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகள் முக்கியமானது. இதனால் நாங்கள் அனைவருடனும் இணைந்து பயணிக்க வேண்டியுள்ளது என்றார்.