உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள தேர்தல்களை ஒத்தி வைப்பது அல்லது நடத்தாமல் விடுவதானது, ஜனநாயகத்தை அழிக்கின்ற மற்றும் ஏகாதிபத்திய ஆட்சி முறைமைக்கு நாட்டை கொண்டு செல்கின்ற பயங்கரமான செயலாகும் என அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரச அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் தேர்தலை குறித்த திகதியில் நடத்தாது காலம் தாழ்த்துவது நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மற்றும் நாட்டின் அரசியலமைப்பையும் மீறுகின்ற செயலாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு மறை மாவட்ட பேராயார் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ள அறிக்கையை ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பின்போதே அருட் தந்தை சிறில் காமினி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய மக்கள் ஆணையே அதிகாரமிக்கது. மக்கள் ஆணையின்படியே, மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கதினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.
தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணை குழுவுக்கு தேவையான சகல விடயங்களையும் செய்து கொடுப்பதற்கு தேர்தலுடன் சம்பந்தப்பட்ட சகல அரச நிறுவனங்களும், அரச அதிகாரிகளும் கடமைப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவினால் 2023 மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரச அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். தேர்தலை குறித்த திகதிகளில் நடத்தாது காலம் தாழ்த்துவது நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறல் ஆகும்” என்றார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (21) காலை நடைபெற்ற இந்த ஊடக சந்திப்புக்கு தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பாடல் நிலையத்தின் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் கிரிஷாந்தவும் கலந்து கொண்டிருந்தார்.

