துருக்கி – சிரிய எல்லையில் 6.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் – இந்தியாவிலும் அதிர்வு

198 0

துருக்கி – சிரிய எல்லையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. . 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இருநாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

துருக்கி – சிரிய எல்லையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 38,000 பேர் உட்பட என இருநாடுகளிலும் இதுவரை 46,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த பூகம்பம்.

இந்தப் பூகம்பத்தின் பாதிப்பில் இருந்து இருநாட்டு மக்களும் மீண்டு வராத நிலையில், சில மணிநேரங்கள் முன்னர் மீண்டும் துருக்கி – சிரிய எல்லையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய அன்டக்யாவில் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு துருக்கிய மீட்பு படைகள் விரைந்துள்ளதாகவும் அந்த பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது மத்திய அன்டக்யாவில் உள்ள பூங்காவில் இருந்த முனா அல் ஓமர் என்பவர் பேசுகையில், “எனது காலுக்கடியில் பூமி பிளவுபடுவது போல் உணர்ந்தேன். இன்னொரு நிலஅதிர்வு ஏற்படுமோ என்ற அச்சம் உண்டாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் அதிர்வு: இன்று மாலை இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூர் பகுதியில் ரிக்டர் அலகில் 3.6 என்ற அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டது. அதேபோல் சில மணிநேரங்கள் முன்பு ஜம்மு காஷ்மீரின் கட்ரா பகுதியில் ரிக்டர் அலகில் 3.4 என்ற அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியிலும் ரிக்டர் அலகில் 3.6 என்ற அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் செய்தி வெளியிட்டுள்ளது.