ஐ.நா.வில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு இலங்கையின் ஆதரவைக்கோரும் ஜேர்மனி

133 0

ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஜேர்மனியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பீற்றர் ரம்ஸோர் இலங்கையிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஜேர்மனியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழுவில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அறிக்கையாளராகப் பதவிவகிக்கும் பீற்றர் ரம்ஸோர் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்தார்.

அதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பீற்றர் ரம்ஸோர் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீதான ரஷ்யப்படையெடுப்பு நிகழ்ந்து எதிர்வரும் வாரத்துடன் ஒரு வருடம் பூர்த்தியடையும் நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது.

உக்ரேனின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவகையில் அமைதி நிலைநாட்டப்படவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் இலங்கை ரஷ்யாவுடன் இணக்கமான உறவைப் பேணிவருவதுடன் ‘அனைவருடனும் நண்பன்’ என்ற வெளியுறவுக்கொள்கையைக் கடைப்பிடித்துவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராகக் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஜேர்மனியப் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.