பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பிணை

132 0

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கும் யாழ். நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலை கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி கண்டன பேரணி இடம்பெற்றது.

தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக கடந்த 6ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரினால் , யாழ். நீதவான் நீதிமன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதன் அடிப்படையில் குறித்த 7 பேருக்கும் நீதிமன்றினால் , இன்று திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு மன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டவர்கள் மன்றில் முன்னிலையானார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் , மன்றில் முன்னிலையானவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆட்சேபணை தெரிவித்து சமர்பணம் செய்ததுடன், அடிப்படையிலேயே இந்த வழக்கினை மன்று தள்ளுபடி செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்தனர்.

அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசணையை கோருமாறும் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

அதனை அடுத்து 7 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, மே மாதம் 08 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களான , சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  ஈஸ்வரபாதம் சரவணபவன், எம். கே. சிவாஜிலிங்கம் , முன்னாள் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மற்றும் மூத்த சட்டத்தரணி என். ஶ்ரீகாந்தா ஆகியோர் முன்னிலையானார்கள்.