தேசத்தை பாதுகாக்கவே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்

108 0

தேசத்தைப் பாதுகாக்கவே காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் நேற்று பேசியதாவது:

நான் இன்னொரு சின்னத்துக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். ஆபத்துக் காலத்தில் இதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. சின்னம், கட்சி, கொடி இதையெல்லாம் தாண்டியதுதான் தேசம். அதைப் பாதுகாப்பதற்காகவே, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன்.

நானும் பெரியார் பேரன்தான்: ஜனநாயகத்தின் வழியாகவும் சர்வாதிகாரம் நம்மை ஆட்கொள்ள முடியும் என்பதற்கானச் சான்று, தற்போது இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவும், அறத்தின் காரணமாகவும் நான் ஈரோடு வந்திருக்கிறேன்.
இதுதவிர, எங்களுக்குள் உறவு இருக்கிறது. அவரும் (ஈவிகேஎஸ்.இளங்கோவன்) பெரியாரின் பேரன்தான். நானும் பெரியாரின் பேரன்தான். நான் பெரியார் பேச்சைக் கேட்டு வளர்ந்த பிள்ளை. அதனால் விட்டுப்போன கடமையைச் செய்ய இங்கு வந்திருக்கிறேன்.

விஸ்வரூபம் என்று ஒரு படம் எடுத்தபோது, என்னைத் தடுமாற வைத்து, வேடிக்கைப் பார்த்து சிரித்தார் ஓர் அம்மையார். அப்போது கருணாநிதி, ஸ்டாலின்ஆகியோர் என்னைத் தொடர்புகொண்டு, உதவுவதாகக் கூறினர். இது என் பிரச்சினை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்போது என் சுயநலத்துக்காக நான் கூட்டணி வைக்கவில்லை. இப்போதும், எந்த லாபமும் எதிர்பார்க்காமல், நம் நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன்.

அதற்கு முன்னோடி வேலைகளைப் பார்த்த ஒரு கட்சியின் வேட்பாளரான இளங்கோவனுக்கு என் ஆதரவைக் கொடுப்பது, ஒருஇந்தியனாக எனது கடமை. இப்படித்தான் நாடு செல்ல வேண்டும் என்றுநிர்ணயிக்கும் பலம் உங்களிடம் இருக்கிறது. ஒரு கட்சிக்காகஅல்லாமல், அறத்துக்காக, நாட்டுக்கு நல்லது செய்வதற்காக வாக்களியுங்கள். விமர்சனங்களைப் பிறகு பார்த்துக்கொள்வோம்.

இந்த கூட்டத்துடன் இருப்பது எனக்குப் பெருமை. கொள்கைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் நலன்என்று வரும்போது, எது நியாயமோ, அதைச் செய்வதுதான் எங்கள் லட்சியம். ஒத்திகை பார்க்காமல், நான் யோசித்து விட்டுத்தான் இங்கு பேசுகிறேன். பலவிமர்சனங்களைக் கேட்டுவிட்டுத்தான், இது சரியான பாதை என்று தேர்ந்து எடுத்துள்ளேன். என் பயணத்தைப் பார்த்தால், பாதை புரியும். இவ்வாறு அவர் பேசினார்.