சம்பந்தனின் கருத்து மிகமிக முட்டாள்தனமானது-சுரேஸ் பிறேமச்சந்திரன்

206 0

ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்துக்கு ஜக்கிய நாடுகள் சபை கால நீடிப்பு வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

இந்த தருணத்தில் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்தானது மிகமிக முட்டாள்தனமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்று (27) மாலை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கால அவகாசம் வழங்குவதனை மறுத்திருக்கின்றார்கள் ஏற்கனவே இருந்த ஒன்றரை வருட காலத்தில் ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள் அதுமாத்திரமல்ல வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மறுத்தவர்கள் ஜ.நா.வில் ஒப்புக்கொண்ட விடயங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தாதவர்கள் இனிவரும் ஒன்றரை வருட கால அவகாசத்தில் எதை செய்யப் போகின்றார்கள்.

இராணுவத்தை விசாரிக்க முடியாது சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது விசாரணை குழுவை அமைக்க முடியாது என்றால் அதற்கு பின்னர் கால அவகாசம் எதற்கு?

இது சம்பந்தனுக்கு விளங்கவேண்டும் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரைவாசி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜ.நா. இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று எழுதி அனுப்பியிருகின்றர்கள்.

பல மாகாண உறுப்பினர்கள் குடியியல் சமூக அமைப்புகள் என்பன கால அவகாசம் வழங்க கூடாது என்று வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

எனவே கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை விளங்கிகொண்டு உடனே கால நீடிப்பு வழங்க கூடாது என்று வெளிப்படையாக உலக அரங்கிற்கும் ஜ.நா.வுக்கும் அறிவிக்க வேண்டும் என்பது எனது கட்சி சார்ந்தும் தமிழ் மக்கள் சார்ந்தும் நான் முன் வைக்கும் கோரிக்கையாகும் என அவர் தெரிவித்தார்.