தேர்தலை ஒரு வருடம் ஒத்தி வையுங்கள்!

117 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரு வருடம் ஒத்திவைப்பதே சிறந்தது என தான் கருதுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துக்கொண்டு நேற்று(18.02.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஜனநாயக முறைப்படி தேர்தல் இடம்பெறுவதோடு மக்களின் வாக்குரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரம் நெருக்கடியை சரி செய்யாமல் தேர்தல் நடத்துவது இருக்கின்ற சொற்ப அமைதி நிலைமையும் கேள்விக் குறியாக்குவதாக அமைந்துவிடும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதற்கு பல மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போதைய நாட்டின் பொருளாதார வீழ்ச்சி நிலைமையில் இதனை எவ்வாறு நடத்துவது என அரசாங்கத்திற்கு சங்கடம் இருக்கிறது.

இந்த நிலைமையில் தேர்தல் ஒன்று இடம் பெற்றால் எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க வேண்டும்.

யாழ்.மாநகர சபையில் என்ன நடந்தது என்பதை பார்த்திருப்பீர்கள் மாநகர முதல்வராக இருந்த ஆனல்ட்டை கட்சிகள் சேர்ந்து முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார்கள். நாங்கள் இந்த கருத்தை கூறுவதை எண்ணி தேர்தலுக்கு பயப்படுகிறோம் எனக் கருதக்கூடாது.

தேர்தல் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிய நிலையில் நாங்கள் சிறந்த வேட்பாளர்களை வட்டாரங்களில் தெரிவு செய்து அதற்கான கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.

ஆகவே எனது தனிப்பட்ட கருத்தை நான் முன் வைத்துள்ள நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.