கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களை சந்தித்தார் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்

258 0

கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு காணிகள் தொடர்பான பிரச்சினை, எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்த நிலையில், அந்த பகுதி மக்களின் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புலவுக்குடியிருப்பில் விமானப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பின்னணியில் இந்த நிலமீட்பு போராட்டம் கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த காலப்பகுதியில் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் சீரற்ற வானிலை காரணமாக ஜனாதிபதியின் பயணம் இரத்துச் செய்யப்பட்ட நிலையில், மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதில் தொடர்ந்தும் இடித்தழுப்பு செய்யப்பட்டுவருகின்றது.

இதனைத்தொடர்ந்து தமது காணிகளை மீட்கும் போராட்டத்தை கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு மக்கள், தொடர்கின்ற நிலையில்,நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசர பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் பிரகாரம் தற்போது வசித்துவரும் மாதிரிக்கிராமத்தில் தொடர்ந்தும் வசிப்பதா அல்லது புலவுக்குடியிருப்பு காணியில் மீள்குடியேறுவதா என்பதை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

மாதிரிக் கிராம காணிகள் தேவையில்லை என கருதி, சொந்த காணிகளில் மீள்குடியேற விரும்புவோர், அரசாங்க அதிபருக்கு அது தொடர்பில் அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையிலும் வீதியோரத்தில் வெயில் கொட்டும் பனிகளையெல்லாம் தாண்டி சொந்தமண்ணில் கால்பதிக்க வேண்டும் என்ற பேராசையுடன் தொடர்கின்றது இவர்களின் அறவழிப் போராட்டம்.

இந்த நிலையில் இன்று காலை  இந்த மக்களை சந்திக்க தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் வருகைதந்து மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.