வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன்-றிஷாட் பதியுதீன்

254 0

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம்.பைசர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கூறியதாவது வவுனியா மாவட்டத்தில் குறிப்பாக சாளம்பைக்குளப் பிரதேசம் இன ஐக்கியத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது. தமிழ் முஸ்லிம் உறவுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இந்தக் கிராமத்தின் வரலாற்றுப் பாரம்பரியம் சிறப்பானது. இந்தக் கிராமத்துக்கும் எனக்கும் அரசியல் ரீதியான நெருக்கமான, நீண்ட கால உறவு இருக்கின்றது. வரலாறுகளை யாருமே இலகுவில் மறைத்தும்விடமுடியாது. அழித்தும்விட முடியாது இந்தப் பிரதேச மக்கள் அகதிகளாகச் சென்று அல்லல்பட்டு வாழ்ந்த பின்னர் மீண்டும் இந்தப் பிரதேசத்துக்கு திரும்பினர். அகதிகளாகச் சென்று சாளம்பைபுரம் என்ற கிராமத்தை உருவாக்கிய வரலாறும் இருக்கின்றது.

அகதி மக்கள் இந்தப் பிரதேசத்துக்கு மீளத்திரும்பிய போது வித்தியாசமான பிரச்சினைகள் வித்தியாசமான கோணத்தில் எழுந்தன குறிப்பாக காணி தொடர்பான பிரச்சினை ஏற்பட வலிகோளியது. அந்தப் பிரச்சினை இங்கு வாழ்ந்த மக்களின் நீண்ட கால உறவுக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எனக்குள் எழுந்தது எனினும் அந்தப் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு எட்டப்பட்டது.

சாளம்பைக்குளம்ப் பிரதேசத்தில் இருக்கும் வவுனியா வளாக மாணவர்கள் இந்த வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயரத்தித் தரும்படி என்னிடம் கேட்டார்கள். இந்தக் கோரிக்கை நியாயமானதாகும். பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப் பட்டால் அதைச்சூழவுள்ள கிராமங்கள் கல்வி நிலையில் மேம்பாடடைவதும் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இயல்பானதே. அந்த வகையில் நான் பயின்ற மொரட்டுவை பல்கலைக்கழகம் சிறப்பான உதாரணமாகும். காடாகக் கிடந்த அந்தப் பிரதேசம் கட்டிடங்களாக காட்சி தருகின்றன.

சாளம்பைக்குளத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் இதைச்சூழவுள்ள ஆயிஷா வித்தியாலயம் அல்-அக்ஷா வித்தியாலயம், சோப்பாளப்புளியங்குளம் ஆகியவை கல்வியில் மறுமலர்ச்சியடையும். திறமையான மாணவர்களைக்கொண்ட இந்தப் பிரதேசம் எதிர்காலத்தில் கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்குமென்பதில் எனக்கு ஐயமில்லை.

அகதி வாழ்விலே அத்தனையும் இழந்த போதும் நமக்குள் அழியாதிருந்த ஒரே ஒரு செல்வமான கல்வியில் அக்கறை காட்டியதனால்தான் நாம் முன்னேறி இருக்கின்றோம். அதே போன்று மீள்குடியேறிய பின்னரும் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும். வெளிநாடுகளிலே கல்விக்காக அதிக பணம் செலவழிக்க  வேண்டியிருக்கின்றது. ஜப்பான் போன்ற நாடுகளில் மாணவர்கள் இடைநடுவில் விலகுவதற்கு அதிக பணச்செலவே காரணம். ஆனால் நமது நாட்டிலே அனைத்தும் இலவசம். ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பு முடியும்வரை அனைத்தும் இலவசமாகவே கிடைக்கின்றது.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஜயதிலக்க, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான முஜாகிர், முத்து முகம்மது, முன்னாள் நகரசபை உறுப்பினர் அப்துல் பாரி, முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஹசன், மற்றும் பள்ளி பரிபாளனசபையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.