சண்முகம் கனகம்மா அவர்களின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

141 0

    15.02.2023

சண்முகம் கனகம்மா அவர்களுக்கு
“நாட்டுப்பற்றாளர்‘‘ மதிப்பளிப்பு.

தமிழீழம், யாழ் மட்டுவிலைச் சேர்ந்த வெள்ளையம்மா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் சண்முகம் கனகம்மா அவர்கள் 06.10.2022 அன்று, உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

1984ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், மாவீரர் மேஜர் கேடில்ஸ் அவர்களின் அறிமுகம் தொட்டு இறுதிவரை இவ் அன்னையின் அரவணைப்பில் பசியாறிய போராளிகள் பலர். அன்றைய காலகட்டத்தில், சிங்கள இராணுவமுகாங்களைச் சுற்றி அமைந்திருந்த காவலரண்களில் கடமையாற்றிய போராளிகளுக்கு உணவுவழங்கும் தாயாக விடுதலைக்குப் பலம்சேர்த்தவராவார். அம்மாவின் முகம் தெரியாத போராளிகளும் அம்மாவை அறிந்து வைத்திருந்தார்கள். இந்திய இராணுவம், எம் தேசத்தை ஆக்கிரமித்திருந்த வேளையில் பல போராளிகளுக்கு அடைக்கலம்தந்து பசியையும் போக்கிய வீரத்தாயுமாவார்.

இந்திய இராணுவத்தின் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பின்போது வேறுவழியின்றி போராளிகள் வீரச்சாவடைய முற்பட்டவேளைகளில், அவர்களின் குப்பிகளையும் ஆயுதங்களையும் தனது வீட்டில் மறைத்து வைத்துப் போராளிகளைப் பாதுகாத்தவராவார். அம்மாவின், இவ் அர்ப்பணிப்புமிக்க துணிச்சலான வீரம்செறிந்த தேசப்பணிகளுக்காக, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் நேரடியாக அழைக்கப்பட்டுப் பாராட்டுதல்களைப் பெற்றவராவார்.

இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடன் இறுதிவரை வாழ்ந்த இவ்வீரத்தாயை
தமிழ்மக்கள் இன்று இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், போராளிகளின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், சண்முகம் கனகம்மா அவர்களது தேசப்பற்றுக்காகவும் தேசத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்‘‘ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.