மக்களின் வாக்குரிமையை மீறினால் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – கிரியெல்ல

124 0

தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். அதனை மீறுவது சட்ட விரோத செயற்பாடாகும். எனவே மக்களின் வாக்குரிமையை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அரசாங்கம் சட்டத்திற்கு விரோதமாக செயற்படுமானால் நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம். அரசாங்கத்திற்கு சட்ட விரோதமாக செயற்பட முடியாதல்லவா?

தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். அவ்வாறிருக்கையில் அதனை திட்டமிட்டு காலம் தாழ்த்துவது சட்ட விரோத செயற்பாடாகும். அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்தினுடையதாகும். அதற்கமைய நீதிமன்றம் மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் என்று நம்புகின்றோம்.

பொருளாதாரத்தை சீரழித்ததன் பின்னர் துரித தீர்வினைக் காண முடியாது. ஓரிரு வருடங்களின் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டு விட முடியும் என்று எண்ண வேண்டாம்.

அவ்வாறு துரித தீர்வு எதுவும் இல்லை. நாட்டில் தற்போது ரூபாவுமில்லை, டொலரும் இல்லை. இன்னும் நீண்ட காலத்திற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும்.

இலங்கை ஒரு பௌத்த நாடாகும். எனவே புத்த சாசனத்தை பாதுகாப்பவர்களையே மக்கள் தெரிவு செய்வர். கடந்த காலங்களில் சுமார் 50 பௌத்த தேரர்களை கொலை செய்த ஜே.வி.பி.க்கு மக்கள் ஆட்சியதிகாரத்தை வழங்கப் போவதில்லை என்றார்.