கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி வலைப்பாடு நீர் விநியோகத் திட்டம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
858 பயனாளிகளுக்கு உதவும் வகையில், உலக வங்கியின் 228.78 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த நீர் விநியோகத் திட்டமே பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச மக்கள் நீண்ட காலமாக குடிநீர் உட்பட நீர்த் தேவையினை பூர்த்தி செய்துகொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்துள்ளனர்.
வறட்சி மற்றும் கடற்கரையோரத்தை அண்டிய கிராமங்கள் என்பதனால் உவர் நீர் பிரச்சினை என பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு தற்போது இத்திட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளது.
இப்பிரதேசத்துக்கு குடிநீர் வசதியினை வழங்குவதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர், கிராஞ்சியில் 80 வீதமான மக்களும், பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவு, வேரவில் பிரதேசங்களில் 70 வீதத்துக்கு மேற்பட்ட மக்களும் இக்குடிநீர் இணைப்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன், பூநகரி பிரதேச செயலாளர் ரி.அகிலன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர் எந்திரி எஸ்.சாரங்கன், நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட முகாமையாளர் யோ.தயாபரன், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தர்கள், நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.


