இந்தோனேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட ஓனேஸ் சுபசிங்கவின் பிரேசில் மனைவி இலங்கையில் வைத்து அவரை பல தடவைகள் அச்சுறுத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒனேஸ் சுபசிங்கவின் மரணம்குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள சிஐடியினர் சுபசிங்கவின் மனைவி இலங்கையில் வைத்து அவருக்கு பல தடவைகள் கொலைமிரட்டல் விடுத்தார் என தெரிவித்துள்ளனர்.
ஒபெக்ஸ்ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் ஸ்தாபகருமான சுபசிங்கவின் படுகொலை இலங்கையில் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் சிஐடியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் சிஐடியினர் இந்தோனேசிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ள விசாரணைகளை அடிப்படையாக வைத்து தகவல்களை பெற்றுள்ளனர்.
சுபசிங்கவின் வீட்டிற்கு வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக பல தடவை சென்றுள்ள சிஐடியினர் அந்த வீட்டின் பணியாளர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
அவர்களின் கைவிரல் அடையாளங்களை சிஐடியினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.அவற்றை ஆய்வுகளிற்காக அனுப்பியுள்ள அவர்கள் வீட்டின் பல பொருட்களை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
வீட்டுப்பணியாளர்களை விசாரணைக்கு உட்படுத்தியவேளை அவர்கள் சுபசிங்கவிற்கும் மனைவிக்கும் இடையில் பல முரண்பாடுகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சுபசிங்கவின் மனைவி அவருக்கு பல தடவைகள் கொலை மிரட்டல் விடுத்தார்- அவர் தனது மகளை பிரேசிலிற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்தார் ஆனால் சுபசிங்க அதனை தடுத்தார் என வீட்டுப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

