இந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதி கடற்தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்குமாறு கோரி, காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரனால் யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த கடிதத்தில்,
காரைநகர் கடற்பிரதேசத்தில் கடந்த வாரம் 3 மீனவர்களுடைய 11 இலட்சம் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டு முழுமையாக சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு இந்திய மீனவர்கள் பொறுப்பாளிகள் என பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களும், கடற்தொழிலாளர் சங்க தலைவரும் தெரிவிக்கின்றார்கள்.
இந்திய தமிழக உறவுகளுக்கும் எமக்கும் உள்ள புரிந்துணர்விலும், உறவிலும் இது விரிசலை ஏற்படுத்துவதால் இது சம்பந்தமாக உரியவர்களிடம் தெரிவித்து தீர்வை காணுமாறும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈட்டைப் பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

