உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தாதுவிடின் நாட்டில் ஐனநாயக நெருக்கடி ஏற்படும்

212 0

நாடு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் நடாத்தாதுவிடின் அது ஐனநாயக நெருக்கடியையும் ஏற்படுத்தும் என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களைத் திட்டமிட்ட காலத்தில் நடத்த வேண்டும்.

அதுவே மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்துப் பாதுகாப்பதாக அமையும். அதுவே மக்களுடைய எதிர்பார்ப்புமாகும் தற்போது வெளிவரும் செய்திகள் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற கேள்வியையும் குழப்பத்தையும்   மக்களிடையே உண்டாக்கியுள்ளன.

அரசியலமைப்பின் பிரகாரம், மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமையும் அதிகாரமும் மக்களுக்குண்டு. அதனை மறுக்கும் அல்லது தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கமுடியாதவையாகும். நாடு அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதன் மூலம் ஜனநாயக நெருக்கடியையும் உருவாக்கக் கூடாது.

ஜனநாயகச் சூழலை மேம்படுத்துவதன் மூலமே மக்களின் உரிமைகளைப் பேணுவதுடன் அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் மீளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.