சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்வைக்க திராணியற்றவர்களாக உள்ளனர்

161 0

சிங்களத் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வினை முன்வைக்க திராணியற்றவர்களாகவே இருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபைக்காக தமிழரசு கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வட்டாரம் 1 மற்றும் 2இல் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

 

கடந்த காலத்தில் நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஜெனிவாவில் பல கட்ட பேச்சுக்கள் நடைபெற்றன.

அவை அனைத்தும் தமிழர்கள் கொண்டிருந்த ஆயுத பலத்தை மையமாகக்கொண்டே நடைபெற்றுள்ளது.

அந்த காலப்பகுதியில் நாங்கள் ஒரு பலமான சக்தியாக இருந்தோம். அப்போது எல்லோரும் எங்களை திரும்பிப் பார்த்தனர்.

நெடுந்தீவு பகுதி தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக காணப்படுகிறது. இப்போதும் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலையில் காணப்பட்டனர்.

அத்தோடு, கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி கடையர்கள் பெரும் அநியாயங்களை செய்தனர்.

நாங்கள் இந்த பிரதேசங்களில் காலடி கூட வைக்க முடியாத பகுதியாக இருந்தது. பாராளுமன்ற தேர்தலுக்காக வந்தபோது தம்பட்டி பகுதியில் வைத்து இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த 2011ஆம் ஆண்டில் ரணில் நெடுந்தீவுக்கு வந்தபோது இரு சக்கர வண்டியிலேயே பயணித்தார். ஆனால், இன்று அவர் ஜனாதிபதியாக வந்துள்ளார்.

தொடர்ந்தும் நில ஆக்கிரமிப்புகள், அச்சுறுத்தல்கள், கொலைகள் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டன.

சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வினை முன்வைக்கக்கூடிய திராணியற்றவர்கள். குறிப்பாக, சஜித் பிரேமதாஸ ‘வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கின்றேன்’ என்று கூற முடியுமா? இல்லை ஜே.வி.பியின் அனுரகுமார திசாநாயக்கவினால் கூற முடியுமா?

வடக்கு, கிழக்கை பிரித்ததே ஜே.வி.பி தான்.  அதனால், வடக்கு, கிழக்குக்கான ஓர் அரசியல் தீர்வினை முன்வைக்க முடியுமா?

இன வாதத்தை காட்டிக்கொண்டிருக்கும் இவர்களை போன்ற சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வினை வழங்க முன்வருவார்களா?

ஏன் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்கின்ற நெடுந்தீவு பிரதேசத்தில் அவர்களது கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதாவது தமிழ் மக்களின் வாக்குகளை சிதைத்து, அவர்களுடைய பலத்தை இல்லாமல் செய்வதற்கு இவ்வாறு தேர்தலில் களம் இறக்கப்பட்டிருக்கின்றனர் என்றார்.

நேற்று நெடுந்தீவுக்கான பயணத்தை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியுள்ளார்.

குறித்த கலந்துரையாடல்களில் நெடுந்தீவு பிரதேச சபைக்காக போட்டியிடும் தமிழரசு கட்சி வேட்பாளர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.-