சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைப் படையினருக்கு புதிய பயிற்சி

215 0

இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு, புதிய பயிற்சிகளை வழங்க,சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொடுக்கப்படும்’ என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார்.

மன்னார், முள்ளியவளையிலுள்ள கடல் கூட்டுபயிற்சி முகாமில் பயிற்சிப்பெற்ற முதலாவது கடற்கூட்டுப் படையினரின் அணிவகுப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அவர் இதனைக் கூறினார்.

அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்புடன், அமெரிக்க கடற்படையினரால், இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சீனா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து, பயிற்சிகள் முன்னெடுக்கப்படும்’ என்றும் அவர் கூறினார்.

‘தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு, தாய்நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த படையினரின் கௌரவத்தை, நாம் பாதுகாப்போம்.

யுத்தத்தால், உயிர் மற்றும் உடல் அங்கங்களை இழந்த படையினரின் குடும்பத்தினருக்கான வரப்பிரசாதங்களை, வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.

கடற்படையின் இவ்வாறான பயிற்சிப்பெற்ற கடற்கூட்டுபடையணி தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முன்னால், இலங்கை படையினரின் கௌரவத்தை நாம் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.

சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் கதைத்து, நவீன தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெற்றுக்கொடுத்து, உலகின் முன்னேறிய படையினராக எமது நாட்டுப் படையினரை மாற்ற, நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றார்.

இந்நிகழ்வில், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.