கோவையில் பல்சர் சுனிலுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது

245 0

நடிகை பாவனா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில், விஜிசுக்கு கோவையில் அடைக்கலம் கொடுத்தவரை போலீசார்  கைது செய்தனர். பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் டிரைவர் மார்ட்டின், முன்னாள் டிரைவர் பல்சர் சுனில், கூலிப்படையை சேர்ந்த சலீம், பிரஜீஷ், அன்வர், மது, பிரபல ரவுடி மணிகண்டன், விஜிஸ் மற்றும் கொச்சியை சேர்ந்த பெண் தொழிலதிபர் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பல்சர் சுனில், அவரது நண்பர் விஜிஸ் ஆகியோரை கொச்சி தனிப்படை போலீசார் கோவை அழைத்து சென்று விசாரித்தனர். இந்த தகவல் அறிந்ததும் கோவையில் பல்சர் சுனில், விஜிஸ் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்த சார்லி தாமஸ் திடீரென தலைமறைவானார். விசாரணையில் சார்லி தாமஸின் சொந்த ஊர் கேரள மாநிலம் கண்ணூர் என்பது தெரியவந்தது. கோவை பீளமேடு ராம் காலனியில் பல வருடங்களாக வசித்து வருகிறார். இவரும் விஜிசும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். விஜிஸ் தலைமையில் கோவையில் ஒரு கும்பல் கஞ்சா சப்ளை செய்து வருகிறது.

இதற்காக விஜிஸ் இங்கு வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொச்சியில் உள்ள ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு சார்லி தாமஸ் பேட்டி அளித்தார். இதுகுறித்து அறிந்த கொச்சி பனங்காடு போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கூறியதாவது:கடந்த வாரம் 2 நாட்கள் என்னுடைய வீட்டில் விஜிஸ், பல்சர் சுனில் ஆகியோர் தங்கியிருந்தனர். செல்லும்போது எனது நண்பர் செல்வனின் பைக்கையும் திருடி சென்று விட்டனர். இவர்கள் பிரபல நடிகையை கடத்தி சென்ற விவகாரம் எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.