‘இலங்கை ஸ்தம்பித்துள்ளது’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

214 0

இலங்கைக்கு நிகரான பல நாடுகள், தற்காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளன. இருப்பினும், இலங்கை மாத்திரம், ஓரிடத்தில் ஸ்தம்பித்துள்ளது என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமை​ இல்லாமல் போயிருத்தல் மற்றும் கிராமியப் பொருளாதாரம் வளர்ச்சியடையாமை போன்ற சில காரணங்களாலேயே, இலங்கையின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது என்றும், தெரிவித்த பிரதமர், தேசிய ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு, கிராமிய பொருளாதாரம் மற்றும் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக, நாட்டை அபிவிருத்தி நோக்கிக் கொண்டுசெல்லலாம் என்றும் கூறினார்.

கிராமியப் பொருளாதார அமைச்சில், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், “பொருளாதாரம் தொடர்பில், நாம் புதிதாகச் சிந்திக்க வேண்டும். மஹிந்த அரசாங்கத்தால், ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள கடனை, 10 வருடங்களுக்குச் செலுத்தியாக வேண்டும். எமது வருமானங்கள் அனைத்தும், இந்தக் கடனைச் செலுத்துவதற்கே போதுமாக உள்ளன. அதனால், புதிய வருமான வழிகளைக் கண்டுபிடித்தாக வேண்டும். வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு முதலீடுகளைப் போன்று, தேசிய முதலீடுகளும் முக்கியத்துவம் வகிக்கின்றன.

நம்நாட்டு தமிழ் சிறுவர்கள், தங்களுக்குத் தெரிந்த மொழியில் தேசிய கீதத்தைப் பாட இடமளிப்பதா? அல்லது அவர்களை வாயை மூடிக்கொண்டு இருக்க விடுவதாக சிறந்தது? தற்போது, இந்நாட்டு அனைத்து இனத்தவர்களும், தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துகின்றார்கள். இவ்வாறாக, தேசிய ஒற்றுமையை நிலைநாட்டி, அபிவிருத்தி நோக்கி, இந்நாட்டைக் கொண்டுசெல்ல வேண்டும்” என்று அவர் கூறினார்.