ரணில் – ராஜபக்ஷ அழிவு உள்ளூராட்சிமன்றத் தேர்தலுடன் ஆரம்பம்

101 0

தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்படுவது வெறுக்கத்தக்கது.

உள்ளூராட்சிமன்றத தேர்தலுடன் ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அழிவு ஆரம்பமாகும் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

நாவல பகுதியில் செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் நோக்கம் தமக்கு கிடையாது,தேர்தலை நடத்தவே முயற்சிக்கிறோம் என அரசாங்கம் ஒருபுறம் குறிப்பிட்டுக் கொண்டு தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒதுக்குவதை அரசாங்கம் தாமதப்படுத்துகிறது.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்ற பிரச்சினை ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் உண்டு.

யானை மற்றும் மொட்டுக் கூட்டணி ஸ்தாபிக்கப்படாத நிலையில் தேர்தலை எதிர்கொள்ள இவ்விரு தரப்பினரும் தயாரில்லை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியும்,பொதுஜன பெரமுனவும் தயார் இல்லை என்றால்.தேர்தல் போட்டியில் இருந்து அவர்கள் தாராளமாக விலகிக் கொள்ளலாம்.நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் உரிமை ஜனாதிபதிக்கும்,அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் கிடையாது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் தேர்தலை பிற்போட அரசாங்கம் தேர்தல் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க உயர்நீதிமன்றத்தை நாடுவதை தவிர மாற்று வழியேதும் தற்போது கிடையாது.உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அரசாங்கத்தை கவிழ்க்காது,அரச நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாது என குறிப்பிடும் அரசாங்கம் தற்துணிவுடன் மக்களின் ஆணையை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.