வறட்சி காரணமாக வரத்து குறைவு: வெங்காயம் விலை கடும் உயர்வு

301 0

தமிழகத்தில் மழை பொய்த்து வறட்சி நிலவுவதால் காய்கறிகள் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதுடன் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

நாகர்கோவில் ஒழுகின சேரியில் அப்டா மார்க்கெட், வடசேரி கனகமூலம் சந்தை ஆகியவை குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய காய்கறி சந்தைகளாக விளங்குகின்றன.

இங்கு குமரி மாவட்டத்தில் விளையும் காய், கனிகள் மட்டுமல்லாமல் ஓசூர், மேட்டுப்பாளையம், நெல்லை, மதுரை, பாவூர்சத்திரம், ஓட்டன் சத்திரம் போன்ற பகுதிகளில் விளையும் காய்கறிகளும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் மழை பொய்த்து வறட்சி நிலவுவதால் காய்கறிகள் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதுடன் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.25, ரூ.30-க்கு விற்ற  சின்னவெங்காயம் தற்போது ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. வெண்டைக்காய்  ஒரு கிலோ ரூ.70-க்கும், நாட்டு கத்தரி ரூ.80-க்கும் விற்பனையாகிறது.

மற்ற காய்கறிகளின் விலை  விவரம் வருமாறு:-

வரி கத்தரிக்காய் (ஒரு கிலோ) – ரூ.40, முட்டைக்கோஸ்-ரூ.20, சேனை – ரூ.40, பீட்ரூட் – ரூ.24, கேரட் – ரூ.30, பீன்ஸ்- ரூ.58, உருளைக்கிழங்கு-ரூ.20, இஞ்சி- ரூ.70, பல்லாரி – ரூ.20, தக்காளி – ரூ.35, புடலைங்காய்-ரூ.30, பூசணிக்காய்-ரூ.20, தடியங்காய்-ரூ.20, உருட்டு மிளகாய்-ரூ.50, சாதா மிளகாய்-ரூ.25, சவ்சவ்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, சுரைக்காய்-ரூ.24.

காய்கறிகள் விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

வறட்சி காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது மட்டுமல்லாமல் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் தான் விலை உயர்ந்துள்ளது. இனி மழை பெய்து விளைச்சல் அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். இதே வறட்சி நிலை நீடித்தால் காய்கறிகள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.