‘சம்பந்தனின் கருத்து முட்டாள்தனமானது’ – சுரேஸ் பிரேமச்சந்திரன்

226 0

“ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை அரசாங்கத்துக்கு கால நீடிப்பு வழங்கக்கூடாது என்று இருக்கும்  போது, இரா.சம்பந்தன், நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்தானது, மிக மிக முட்டாள்தனமானது” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, நேற்றுச் சந்தித்துக்கு கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “ஏற்கெனவே இருந்த ஒன்றரை வருடகாலத்தில், ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள், அதுமாத்திரமல்லாமல், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மறுத்தவர்கள்,ஐ.நா.வில் ஒப்புக்கொண்ட விடயங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தாதவர்கள், இனிவரும் ஒன்றரை வருட கால அவகாசத்தில் எதை செய்யப்போகின்றார்கள்?” என்றுக் கேள்வி எழுப்பினார்.

இராணுவத்தை விசாரிக்கமுடியாது. சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. விசாரணைக் குழுவை அமைக்க முடியாது என்றால், அதற்குப் பிற்பாடு கால அவகாசம் எதற்கு? இது சம்பந்தனுக்கு விளங்கவேண்டும். எற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரைவாசி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்று எழுதி அனுப்பியிருகின்றர்கள். எனவே சம்பந்தன், இதனை விளங்கிகொண்டு, உடனே கால நீடிப்பு வழங்கக்கூடாது என்று வெளிப்படையாக, உலக அரங்குக்கும் ஐ.நா.வுக்கும் அறிவிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம், எமது உறவுகளைத் தேடித்தராது என்பதை, மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். எனவேதான், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, சர்வதேச விசாரணை என்பது அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது” என, அவர் கூறினார்.