மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

233 0

மும்பையை மையமாக கொண்ட மதபோதகரும், ‘இஸ்லாமிக் ஆய்வு அறக்கட்டளை’ நிறுவனருமான ஜாகிர் நாயக்குக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பையை மையமாக கொண்ட மதபோதகரும், ‘இஸ்லாமிக் ஆய்வு அறக்கட்டளை’ நிறுவனருமான ஜாகிர் நாயக் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரது அறக்கட்டளைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தற்போது சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் ஜாகிர் நாயக் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இதுவரை அவர் ஆஜராகவில்லை.

தான் இந்தியா வந்தால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், இணையதள காணொலி மூலம் இந்த விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதை நேற்று நிராகரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள், நேரில் ஆஜராகுமாறு 4-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பினர்.

இந்த சம்மனை அவரது வக்கீல்கள் மூலமும், இ-மெயில் மூலமும் ஜாகிர் நாயக்குக்கு அனுப்பி வைத்தனர். இதுவே கடைசி சம்மனாக இருக்கும் என்று கூறியுள்ள அதிகாரிகள், இனியும் அவர் ஆஜராக தவறினால் கோர்ட்டு மூலம் கைது வாரண்டு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.