சுமந்திரனால் கூட்டமைப்பு உடையும்! தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகும்! -ச.வி கிருபாகரன்

87 0

தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாக பயணித்திருக்கும் ஆனால் சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிளவுப்படும் என பிரான்ஸ் மனித உரிமைகள் இல்லத்தினுடைய இயக்குனரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி கிருபாகரன் தெரிவித்திருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்   வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,“சுமந்திரனுக்கு 2009 இற்கு முன்னர் அரசியலும் தெரியாது விடுதலைப்புலிகள் போராட்டம் தொடர்பிலும் தெரியாது.

இந்நிலையில் புதிதாக அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்துவதற்கு காரணம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சியை உடைத்தது தான்.இதன் காரணமாக தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரன் முக்கியத்துவம் பெற்றார்.

சுமந்திரன்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தான் நினைத்த வேலைகளை செய்தார். தனது விருப்பத்திற்கமையவே வேட்பாளர்களை தீர்மானித்திருந்தார். தான் விரும்பும் அமைச்சு பதவிகளை பெறுவதற்கு மூன்றில் இரண்டு கேட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிரியும்

மேலும் தேர்தலில் தமிழ் தேசியத்திற்கோ, தமிழ் கூட்டமைப்பிற்கோ எந்த சம்பந்தமும் இல்லாத தலைவர்களை சுமந்திரன் வேட்பாளராக முன்னிறுத்தினார்.

(2020 நாடாளுமன்ற பொது தேர்தலில்) இதேவேளை மாவை சேனாதிராஜா போன்றோர் கட்சியை ஒருநிலைப்படுத்த முயற்சிக்கும் போது சுமந்திரன் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

இந்த செயற்பாடுகளின் உள்நோக்கத்தை நான் இப்போதே சொல்கிறேன். அவர் இந்த தேர்தலில்(2020 நாடாளுமன்ற பொது தேர்தல்) வெற்றி பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிரியும் சில வேலை தமிழரசுக் கட்சிகளும் பிரிய வாய்ப்பு உள்ளது.

ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால், அவர் இந்த தேர்தலில் களமிறக்கியுள்ள வேட்பாளர்கள் அனைவரும் அவருக்கு சார்பாக இருக்க கூடியவர்கள் தான்.எனவே சுமந்திரன் இந்த தேர்தலில்(2020 நாடாளுமன்ற பொது தேர்தல்) வெற்றி பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிரிவது நிச்சியம்”என கூறியிருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மனித உரிமை செயற்பாட்டாளர் ச.வி கிருபாகரன் இந்த விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதற்கமைவாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது பிளவுப்பட்டுள்ளது.

அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த, தமிழரசுக் கட்சி,ரெலோ,புளொட் ஆகிய கட்சிகள் தற்போது பிளவுப்பட்டு,தமிழரசுக் கட்சி தனியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கி ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என ஐந்து கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணியாகவும் உருவாக்கியுள்ளனர்.

இதேவேளை தமிழரசுக் கட்சிக்குள்ளும் தற்போது ஓர் பிளவு ஏற்பட்டுள்ளமையை அண்மைய அரசியல் செயற்பாடுகள் ஊடாக காணக்கூடியதாக உள்ளது.

அதாவது இரு சார்பு கொள்கை ஊடாக, சுமந்திரனுக்கு முரணான ஒரு எதிர் நிலைப்பாட்டில் ஸ்ரீதரன் இருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்ட எழுச்சி பேரணியானது கடந்த செவ்வாய்கிழமை(07.02.2023) நிறைவு பெற்றது.

இந்த எழுச்சி பேரணியில் அரசியல் பிரமுகர்கள்,மாணவர்கள், பொது மக்கள் என பல தரப்பினர் கலந்துக்கொண்ட போதிலும் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.

இதேவேளை இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.இதன்போது இலங்கைத் தமிழரசு கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களுள் ஒருவரான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அந்நிகழ்வை புறக்கணித்திருந்தனர்.

இதேவேளை இலங்கைத் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளிலும் தனிநபர் ஆதிக்கத்தாலும் அதிருப்தி கொண்ட, தமிழ் தேசியத்தின் பால் பற்றுள்ள பலர் ஓரணியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அதன் ஒரு வெளிப்பாடாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அணியின் ஆதரவின் வெளிப்பாடு இருக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக தமிழரசுக் கட்சிக்குள்ளும் தற்போது ஓர் பிளவு ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டு வருகின்றது.

தற்போதைய ஒட்டுமொத்த அரசியல் நிலைப்பாடுகள்,கட்சிகளுக்கிடையிலான பிளவுகளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ச.வி கிருபாகரன் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.