தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளால் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன

225 0

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு உடனடியாக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

மிலான் ஜயதிலக, சஹன் பிரதீப், சுதர்ஷன தென்பிட்டிய, கோகிலா குணவர்தன, திஸ்ஸ குட்டியாராச்சி, உபுல் ராஜபக்ஷ உள்ளிட்ட 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் சில செயற்பாடுகளின் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்படுவதாகவும் , அதன் அடிப்படையில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் 3ஆம் திகதி 5 உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் ஆணைக்குழுவை நியமிப்பதற்கும் மற்றும் அரசியலமைப்பின் 1048 (3) உறுப்புரையின் கீழ் பாராளுமன்றத்திற்கு அவர்கள் கூற வேண்டிய பொறுப்புக்கள் தொடர்பிலும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை  சமர்ப்பிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தவறியுள்ளதாகவும் , அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய முடியாது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கையினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்குமாறும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தின் மூலம் கோரப்பட்டுள்ளவாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான ஏற்பாடும் உள்ளது.

அந்த ஏற்பாடுகளின் அடிப்படையில், இந்தக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சபாநாயகரால் நியமிக்கப்படுவதுடன், பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 101 இன் விதிகளின்படி இது ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகவும் காணப்படும்.

இந்த குழுவிற்கு தனது நடப்பெண்ணை நிர்ணயம் செய்யவும், எவரையும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுப்பதற்கும் , எந்தவொரு நபருக்கும் எந்தவொரு ஆவணம் அல்லது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான அறிவிப்பினை விடுப்பதற்கும் , ஆதாரங்களைப் பெறவும், சம்பந்தப்பட்ட துறைகளில் நிபுணர்களின் சேவைகளைப் பெறவும் அதிகாரம் உள்ளது.

குழுவின் முதல் கூட்டத்தில் இருந்து ஒரு மாதத்திற்குள் அல்லது பாராளுமன்றம் வழங்கிய திகதியின் தனது அறிக்கையை இக்குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.